நல்லாசிரியர் விருதுக்கு கடும் கட்டுப்பாடு சிபாரிசுக்கு அடிபணியாதீர் என அறிவுரை

தமிழக நல்லாசிரியர் விருதுக்கும், மத்திய அரசை போல, முழுமையாக விசாரணை நடத்தி, தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்; சிபாரிசுக்கு அடி பணியக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி, ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்., 5, நாடு முழுவதும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

இதற்காக, மத்திய அரசின் சார்பில், ஆசிரியர்களுக்கு தேசிய விருதும், மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. கடந்த, 25 ஆண்டுகளுக்கும் மேலாக, அரசியல் மற்றும் பணபலம் உள்ளிட்ட செல்வாக்கு பெற்றவர்களுக்கே விருதுகள் கிடைத்தன. தகுதியான ஆசிரியர்களுக்கு விருது கிடைப்பது அரிதாக இருந்தது. 

ஆனால், 2017 – 18ம் கல்வி ஆண்டில், தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு, ஓரளவு தகுதியானவர்களே தேர்வு செய்யப்பட்டனர்.இந்நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, கோவையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை சதி மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்துக்கு, ஆறு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டாலும், மத்திய அரசின் தேர்வுக்குழு, கிடுக்கிப்பிடி நிபந்தனைகளை பின்பற்றியதால், ஒருவர் மட்டுமே தேர்வாகியுள்ளார்.

இதேபோல, தமிழக நல்லாசிரியர் விருது தேர்விலும், கவனமாக செயல்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மொத்தம், 369 விருதுகள் வழங்க முடிவு செய்தாலும், தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்பதற்காக, நிபந்தனைகளை தளர்த்தி, தகுதி இல்லாதவர்களை தேர்வு செய்யக்கூடாது என, கமிட்டி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளின் சிபாரிசுகளை ஏற்க கூடாது. குற்ற வழக்கு, குற்றச்சாட்டு, மாணவர்களின் அதிருப்திக்கு உள்ளானோர், கல்வி தரத்தை உயர்த்துவதில் ஆர்வம் காட்டாதோரையும் தேர்வு செய்யக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here