கோவை:’வீட்டுப்பாடம் எழுதாதவங்க எல்லாம் எந்திரிச்சி நில்லுங்க’ – உற்சாகமாக காலையில் வகுப்புக்கு செல்லும், மாணவர்களின் மனநிலையை முடக்கிப்போட்டு, மனதளவில் குற்ற உணர்வை சுமக்க வைக்கிறது வீட்டுப்பாடம் குறித்த இந்த உத்தரவு. இதில் இருந்து, மாணவர்களைவிடுவிக்க வேண்டும் என்பதே, பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.

மாநில பாடத்திட்டம், சமச்சீர் கல்வித்திட்ட அடிப்படையில், எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறையில், வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு பருவத்திற்கும் பிரத்யேக புத்தகங்கள் அளிக்கப்படுவதோடு, பாடங்கள் கையாளப்பட வேண்டிய முறை குறித்து, ஆசிரியர்களுக்கு பாடத்திட்ட செயல்பாடுகளில் விளக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு பாடத்தின் பின்புறமும், சுய மதிப்பீட்டு பகுதி, குழு மதிப்பீட்டு செயல்பாடுகள் உள்ளன. இதை பெரும்பாலான பள்ளிகளில் பின்பற்றுவதில்லை; வீட்டுப்பாடம் என்கிற பெயரில், எழுத்துப்பயிற்சிக்கே, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

வாசித்தல், பாடத்திட்ட கருத்துகளை, புற சூழலில் இருந்து நேரடியாக பெறுதல் என, செயல்வழி முறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை என குற்றம் சாட்டுகின்றனர் பெற்றோர்.இதனால், மாலை பள்ளி விட்டு, வீடு திரும்பும் குழந்தைகள், விளையாட கூட நேரமின்றி, வீட்டுப்பாடத்திலே மூழ்கி விடுகின்றனர். சி.பி.எஸ்.இ., பள்ளிகள் பின்பற்றிய இந்நடைமுறைக்கு, அக்கல்வி வாரியம் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, வகுப்பு நேரத்திலேயே, எழுத்துப்பணிகளை முடிக்க உத்தரவிட்டது. செயல்வழி முறைகளில், வீட்டுப்பாடம் அளிக்கவும் அறிவுறுத்தியது.

இந்நடைமுறையை, மாநில கல்வித்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளும் மேற்கொண்டால், மாணவர்கள் மன உளைச்சலில் இருந்து தப்பிப்பர். வீட்டுப்பாடம் எனும் ‘போபியா’வில் இருந்து, இளம் பிஞ்சுகளை காப்பாற்றுவது, கல்வித்துறையின் கையில் தான் உள்ளது.

மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் சரவணவேல் கூறுகையில்,”அனைத்து பாடங்களுக்கும், தினசரி வீட்டுப்பாடம் அளிக்கப்படுகிறது. பெரும்பாலும் குழந்தைகள் எழுதிக்கொண்டே இருக்கின்றனர். இது, பாடத்திட்டத்தின் மீதுள்ள, ஈடுபாட்டை குறைத்துவிடும். செயல்வழியில் வீட்டுப்பாடம் அளிக்குமாறு, கல்வித்துறை உத்தரவிட வேண்டும். இம்முறை மூலம் தான், குழந்தைகளின் தேடல் விரிவடையும்,” என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here