சிறார்களை தற்கொலைக்கு தூண்டும், ‘மோமோ’ : பெற்றோர், ஆசிரியர்கள் உஷாராக இருக்க போலீசார் எச்சரிக்கை

சிறுவர்கள் மற்றும் மாணவர்களை தற்கொலைக்கு துாண்டும், ‘ப்ளூ வேல்’ என்ற, ‘ஆன் லைன்’ விளையாட்டு போல, தற்போது, ‘மோமோ’ என்ற, அரக்கன் தலை துாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘குழந்தைகள் பாதுகாப்பில், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும்’ என, போலீசார் எச்சரித்துள்ளனர்.

சிறுவர்கள் மற்றும் வாலிபர்களை தற்கொலைக்கு துாண்டும், ‘ப்ளூவேல்’ என்ற, ‘ஆன் லைன்’ விளையாட்டு, 2017ல், தமிழகம் உட்பட, உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அச்சுறுத்தி வந்தது. அதாவது, மொபைல் போனில், ‘ப்ளூவேல்’ என்ற, ஆன் லைன் விளையாட்டிற்கான, ‘ஆப்’பை பதிவிறக்கம் செய்தால் போதும். அவர்களுக்கு, 50 நாட்களுக்கு, ‘டாஸ்க்’ தரப்படும்.

கட்டளைகள் உதாரணமாக, ‘உன் கையில் பிளேடால், மூன்று முறை கிழித்துக் கொள்; அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலையில் பேய் படம் பார்; ‘செல்பி’ எடுத்து அனுப்பு. ‘நள்ளிரவில், ரயில்வே டிராக்கில் நில்; அந்த, ‘வீடியோ’ காட்சியை, சமூக வலைதளங்களில் பதிவேற்று. உயரமான கட்டடம் மற்றும் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்’ என, அடுக்கடுக்காக, கட்டளைகள் பிறப்பிக்கப்படும். இதை எல்லாம் செய்யமாட்டேன் என்று, சொல்ல முடியாது. ஏனெனில், இந்த ஆன்லைன் விளையாட்டிற்கான, ‘ஆப்’பை பதிவிறக்கம் செய்யும் போதே, உங்கள் மொபைல் போனில் இருக்கும் அனைத்து தகவல்களும், இந்த விளையாட்டு தொடர்பான, சர்வருக்கு சென்று விடும்.

 ‘டாஸ்க்கை செய்யவில்லை என்றால், உங்கள் தகவல்கள் அனைத்தும், பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என, மிரட்டல் வரும். மொபைல் போன்களை, ‘ஹேக்’ செய்பவர்களால் நடத்தப்பட்டு வந்த, இந்த விளையாட்டால், பலர் பலியாகினர். தமிழகத்தில், மதுரையை சேர்ந்த, விக்கி, 19 என்ற, தனியார் கல்லுாரி மாணவர், ‘ப்ளூவேல்’ விளையாட்டில் சிக்கி, தற்கொலை செய்து கொண்டார்.தற்போது, புளூவேலுக்கு நிகராக, ஆன்லைனில் விளையாடக் கூடிய, ‘மோமோ’ என்ற, அரக்கன் தலை துாக்கி உள்ளான். இந்த விளையாட்டிற்கான இணைய இணைப்பு, ‘வாட்ஸ் ஆப்’பில் வேகமாக பரவி வருகிறது.

கண்காணிக்க வேண்டும் : இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:இணையதளம் வழியாக தகவல் திருட்டில் ஈடுபடும், ஹேக்கர்களால், ‘ஆன் லைன்’ விளையாட்டிற்கான, ‘ஆப்’வடிவமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள், ப்ளூவேல், மோமோ என, பல்வேறு பெயர்களில், ‘ஆப்’கள் துவங்கி, பலவீனமானவர் களை தற்கொலைக்கு துாண்டி வருகின்றனர். 

இதுபோன்ற விளையாட்டு களை தடை செய்ய, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பெற்றோர், தங்கள் குழந்தைகள், நள்ளிரவு மற்றும் அதிகாலையில், கணினி மற்றும் மொபைல் போனில், நேரத்தை அதிகமாக செலவிடுகின்றனரா என, பார்க்க வேண்டும். அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில், மாணவர்களின் செயல்பாடுகளை, ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால், அவர்களுடன் பேசி, சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here