சிறப்பாசிரியர் சான்றிதழ் பிரச்னை : இன்று சரிபார்ப்பு நடக்குமா?

சிறப்பு ஆசிரியர் பதவிக் கான தேர்வில், சான்றிதழ் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடக்குமா என, தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழக அரசு பள்ளிகளில், உடற்கல்வி, ஓவியம், தையல், மற்றும் இசை பாடப்பிரிவுகளுக்கு, 1,325 சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வாயிலாக, 2017 செப்., 23ல் போட்டி தேர்வு நடந்தது. இதில், 36 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், சிறப்பு ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வைத்திருப்போர், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை, டி.ஆர்.பி.,யிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், சிறப்பு ஆசிரி யர்களுக்கான தேர்வை நடத்தும், தேர்வுத்துறையோ, தமிழ்வழி சான்றிதழ் வழங்குவதில்லை என, அறிவித்துள்ளதால், தேர்வர்கள் தாங்கள் படித்த பள்ளியில், தமிழ் வழி சான்றிதழ் பெற முற்பட்டனர்; அதுவும் முடியவில்லை.மேலும், அரசு தேர்வுத்துறை மட்டுமே, தொழிலாசிரியர் சான்றிதழ் பயிற்சியை நடத்தியது. ஆனால், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் சார்பிலும், இந்த பயிற்சி நடத்தப்பட்டதாக கூறி, சிலர் சான்றிதழ் வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், புகார் எழுந்து உள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்டோர், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் மற்றும் டி.ஆர்.பி., அதிகாரிகளிடம் மனு அளித்துஉள்ளனர். உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அறிவித்தபடி சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடக்குமா; தள்ளி வைக்கப்படுமா என, தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுஉள்ளது.’வழக்கு உள்ள நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பை மற்றொரு தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும்’ என, கலை ஆசிரியர் நல சங்கம் கோரிக்கை விடுத்துஉள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here