மாணவர்கள் வாழ்வில் மாற்றம் தருமா மாற்றப்பட்ட பாடத்திட்டம்?

சென்னை: 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய ஒரு கேள்வி நாம் இன்னும் ஏன் ஆங்கிலேயர் கொண்டு வந்த பாடத்திட்டத்தை பின்பற்றவேண்டும் அதிலுள்ள சாதக பாதகங்கள் என்னென்ன என்ற கேள்விகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. ஆனாலும் அதற்கான விடைகளோ அதற்கு மாற்றோ கிடைக்கவில்லை மாறாக அத்தனை கேள்விகளும் தொக்கியே நிற்கின்றன. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு சில கேள்விகள் நீட் அவசியமா இல்லையா? அப்படியே நீட் கட்டாயம் என்றாலும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்திற்கு இணையாக மாநில பாடத்திட்டம் உள்ளதா போன்ற கேள்விகள் மாணவர்களையும் பெற்றோர்களையும் சூறாவளியாக சுற்றி சுழன்றடிக்கிறது.
நீட் தேர்வை எதிர்க்கும் பெற்றோர்கள் கூட வேறு வழியில்லாமல் நீட் தேர்வை எதிர்கொண்டாகவேண்டும் என்ற சூழலில் தங்களது குழந்தைகளுக்கும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டம் இருந்தால் நல்லது என்றே எண்ணுகிறார்கள். 12 முதல் 15 வருடங்கள் வரை பயிலும் பள்ளிப்படிப்பு முடித்து வரும் ஒரு மாணவர்கள் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்களா? பொதுமக்கள் கூடும் இடத்தில் திடீரென ஏற்படும் ஒரு நெருக்கடியை சமாளிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்களா? அடுக்கு மாடி குடியிருப்புகள் பெருகிவரும் சூழலில் அங்கு ஏற்படும் சூழல் சார்ந்த பிரச்சனைகள் என்ன அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது? போன்ற சின்ன சின்ன வாழ்வியல் சார்ந்த பிரச்சனைகளுக்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்ற கேள்விகளுக்கு பெற்றோர்களோ அல்லது மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ கூட கவலை கொண்டதாக தெரியவில்லை ஏன் கவனம் கொண்டதாகக் கூட தெரியவில்லை.
சமீபத்தில் வடமாநிலத்தில் மிருகக்காட்சி சாலைக்கு சென்ற ஒருவரை மனைவி குழந்தைகளின் கண் முன்னரே புலி ஒன்று அடித்துக் கொல்கிறது. அவரை காப்பாற்ற எவரும் முன்வரவில்லை. ஏன் எனில் எப்படி காப்பாற்ற வேண்டும் என்ற தெளிவு யாருக்கும் இல்லை. கால் நூற்றாண்டுகளுக்கு மேல் கல்வி கற்று ஒரு இடர் ஏற்படும் சூழலில் ஒரு உயிரைக் கூட காப்பாற்ற முடியவில்லையெனில் நாம் கற்ற கல்வியினால் வாய்த்த பலன் என்னவோ? யாராவது ஒருவர் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி அதில் தீயை பற்றவைத்து அந்தப் புலியின் முன்னர் எறிந்திருந்தால் நெருப்பை காணும் அந்த மிருகம் பயந்து ஓடியிருக்கும். இது போன்ற நடைமுறை சிக்கல்களையும் தீர்க்கும் வழிமுறைகளும் கல்வித் திட்டத்தில் இருக்கவேண்டும் என்பதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். பட்டப்படிப்பை முடித்துவரும் ஒரு மாணவன் ஒருவன் வங்கிக்கு சென்றால் வங்கியில் இருக்கும் ஒரு பார்மை கூட நிரப்ப தெரியாமல் விழித்துக் கொண்டிருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மாநில பாடத் திட்டங்கள் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டங்களுக்கு ஏற்றார்போல தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 1,6,9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் புதியப் பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக 11-ஆம் வகுப்புக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு புதியப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில்தான் சிக்கலே எழுந்துள்ளது. மாநில பாடத்திட்டத்தின்படி இதுவரை பயிற்றுவித்த தமிழக கல்வித்துறை மதிப்பெண் சார்ந்த கல்விக் கட்டமைப்பையே உருவாக்கியிருக்கிறது.
பொதுத் தேர்வு கேள்வித்தாள்கள் கூட ப்ளு பிரிண்ட் வைத்து தயாரித்துக்கொண்டிருந்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் நடத்தப்படும் கோழிப்பண்ணை பள்ளிகளில் பாடங்களில் உள்ள கேள்விகள் அதற்காக தயாரிக்கப்பட்ட விடைகள் இவற்றை மாணவர்களிடம் திணித்து திணித்து தேர்வு நடைபெறும்போது அவற்றை வாந்தி எடுக்க வைத்து மாணவர்களை மதிப்பெண் குவிக்கும் இயந்திரங்களாக மாற்றிவிட்டு இருந்தனர். இது தமிழகம் முழுக்க பெரும்பாலான பள்ளிகளுக்கு பொருந்தும். இந்நிலையில் தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ள பாடத்திட்டம் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்திற்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக்கல்வி சார்ந்த கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை மாணவர்கள் புரிந்து கொள்வதில் பெரும் சிரமம் உள்ளது. பெரும்பாலான ஆசிரியர்களுக்கே இந்த பாடத்திட்டம் புதிதாக தோன்றுவதோடு அவற்றை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
ஆசிரியர்களின் நிலையே இப்படி இருக்கிறது என்றால் மாணவர்களின் நிலை சொல்லித்தெரியவேண்டியதில்லை. ரோஷினி இவர் 11 ம் வகுப்பு படிக்கும் மாணவி இவர் படிக்கும் பள்ளியில் இதுவரை அனைத்து வகுப்புகளிலும் இவர்தான் முதல் மாணவி. இவரிடம் இந்த பாடத்திட்டங்கள் குறித்து கேட்டபோது, மிகவும் சிரமமாக உள்ளது புரிந்து கொள்ள கடினமாக உள்ளது பெரும்பாலும் செயல் முறையில் உள்ளதால் நடைமுறையில் கற்பது கடினமாக உள்ளது என்று குறிப்பிட்டார். அதே வேளையில் இந்த பாடத்திட்டம் குறித்து குளோறி என்ற ஆசிரியையிடம் கேட்டபோது இந்த பாடத்திட்டம் நன்றாக உள்ளது ஆனால் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன என்றார். தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் ஏற்றார் போல உள்ளது. கிராமப்புறமோ அல்லது நகர்ப்புறமோ படிக்கின்ற அனைத்து மாணவர்களும் தொழில்நுட்ப அல்லது மருத்துவ படிப்பை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள் என்று எவ்வாறு கூற முடியும் ஆக அப்படிப்பட்ட படிப்புகளை தேர்வு செய்யாத மாணவர்களையும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏற்றாற்போலவும் பாடத்திட்டம் இருத்தல் அவசியம் என்று கூறிய ஆசிரியை குளோரி இதற்காக ஒரு யோசனையையும் முன் வைத்தார். இப்போது மாற்றப்பட்டிருக்கும் பாடத்திட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெறும் அளவிற்கு 40% கேள்விகளையாவது முன்பிருந்த பாடத்திட்ட பாடங்களில் இருந்து கேட்கலாம். அப்போது ஒரு சராசரி அல்லது அதற்கு கீழ் உள்ள மாணவனும் தேர்வில் வெற்றி பெறுவான் அதே வேளையில் உயர் படிப்புகளுக்கு செல்ல விரும்பும் மாணவன் பழைய பாடத்திட்டப் படி உள்ள 40% மற்றும் இப்போது உள்ள பாடத் திட்டப்படி உள்ள 60% விழுக்காடு என்று அனைத்து பாடங்களையும் படித்து உயர்கல்விக்கும் தன்னை தயார்படுத்திக் கொள்வான் என்றார்.
வெற்றி என்ற ஒற்றை இலக்கோடு மட்டுமே பயணிக்கும் இந்த சமூகத்தில் ஆசிரியை குளோறியின் ஆலோசனை இப்படி ஒரு சரியான விளக்கமாக இருக்க ஆசிரியர்கள் மாணவர்கள் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தியிடம் கேட்டபோது (அவரது முழுப் பேட்டி வீடியோ இணைப்பில்) இந்த பாடத்திட்டம் உண்மையில் நல்ல பாடத்திட்டம். ஆனால் இந்த பாடத்திட்டத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி அவசியம் அதோடு கால அவகாசமும் வேண்டும், புதிது புதிதாக ஆசிரியர்கள் கற்றுக் கொண்டிருந்தால் மட்டுமே மாணவர்களிடம் இந்தப் பாடத் திட்டத்தின் பயனை கொண்டு போய் சேர்க்க இயலும். ஆசிரியர்களும் தற்போது மாணவர் நிலையிலிருந்து கற்றாகவேண்டியது அவசியம் என்கிறார் ஜெயப்பிரகாஷ் காந்தி.
எந்த ஒரு புதிய மாற்றம் வரும்பொழுதும் அதில் சின்ன சின்ன சவால்களும் கடினமான விசயங்களும் இருப்பது என்பது இயற்கைதான் அதை நாம் எப்படி வெற்றி கொள்கிறோம் அதற்காக நாம் வகுக்கும் யுக்திகள் என்ன? அதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் கால அவகாசம் என்ன போன்றவற்றை பொறுத்தே நமது வெற்றி அமைகிறது. இந்த பாடத்திட்டமும் வெற்றியை தரும், ஆனால் உடனடியாக இல்லை என்பது மட்டும் நிதர்சனம்.
source: oneindia.com

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here