மெரினா நினைவிடங்கள் வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றம்!


மெரினா நினைவிடங்கள் வழக்கு: வேறு அமர்வுக்கு  மாற்றம்!
மெரினா நினைவிடங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 30) உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆரின் நினைவிடங்கள் உள்ளன. 2016 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க கூடாது என்று வலியுறுத்தியிருந்தார். கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை மீறி மெரினா கடற்கரையில் எந்தக் கட்டிடமும் கட்டக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்றும் அங்குள்ள மற்ற நினைவிடங்களையும் காந்தி மண்டபத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த ஜூன் 18 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதியில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமையக் கூடாது என்பது தான் தமது தனிப்பட்ட கருத்து எனத் தெரிவித்திருந்தார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.

இதற்கிடையே, மெரினாவில் உள்ள நினைவிடங்களை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிய வழக்கை விரைந்து விசாரிக்குமாறு டிராஃபிக் ராமசாமி மேல்முறையீடு செய்தார். அப்போது நினைவிடங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரிக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இவ்வழக்கு இன்று (ஜூலை 30) விசாரணைக்கு வந்தபோது, அரசின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, வழக்கு விசாரணையை நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வுக்கு மாற்றியதுடன், நினைவிடங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here