Home அறிவோம் அறிவியல்.. டிங்குவிடம் கேளுங்கள்: மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பூமியின் எடை அதிகரிக்குமா? அளவுக்கு...

டிங்குவிடம் கேளுங்கள்: மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பூமியின் எடை அதிகரிக்குமா? அளவுக்கு அதிகமாக எடை அதிகரித்தால் பூமி என்னாகும் டிங்கு?

214
0

அறிவோம் அறிவியல்..

டிங்குவிடம் கேளுங்கள்: எடை அதிகரித்தால் பூமி என்னாகும்

மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பூமியின் எடை அதிகரிக்குமா? அளவுக்கு அதிகமாக எடை அதிகரித்தால் பூமி என்னாகும் டிங்கு?
– வெ. லாவண்யா, 8-ம் வகுப்பு, தூய வளனார் பள்ளி, தஞ்சாவூர்.
ஒரு பொருளை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. உயிர்கள் இந்தப் பூமியிலிருந்தே தோன்றி, பூமியிலேயே மடிகின்றன. ஆக்கமும் அழிவும் தொடர்ந்துகொண்டிருப்பதால், ஏறக்குறைய சமன் ஆகிவிடும். இதனால் பூமியின் எடை அதிகரிக்காது .
பச்சோந்தியின் நாக்கில் பூச்சிகள் எப்படி ஒட்டிக்கொள்கின்றன டிங்கு?
– ஆர். கார்த்திகேயன், அருப்புக்கோட்டை.
பூச்சிகளை உணவாகச் சாப்பிடும் விலங்குகளுக்கு இயற்கையே ஒரு தகவமைப்பை வழங்கியிருக்கிறது. இவற்றின் நாக்குகள் பசைத் தன்மையுடன் காணப்படுகின்றன. பூச்சிகளைக் கண்டதும் நாக்கை நீட்டினால், அவை தப்பிச் செல்ல முடியாமல் ஒட்டிக்கொள்கின்றன. பச்சோந்தி மட்டுமில்லை, பல்லி, தவளை போன்றவற்றின் நாக்குகளிலும் பசை உண்டு கார்த்திகேயன்.
விலங்குகளுக்கு ஏன் வியர்ப்பதில்லை, டிங்கு?
– எஸ். ஹரிஹரசுதன், 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம், திருச்சி.
விலங்குகளுக்கு வியர்ப்பதில்லை என்று சொல்லிவிட முடியாது, ஹரிஹரசுதன். பாலூட்டிகள் வெப்ப ரத்தப் பிராணிகள். தங்கள் உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ளக்கூடிய தகவமைப்பைப் பெற்றுள்ளன. வெளிப்புற வெப்பநிலை அதிகரிக்கும்போது வியர்வைச் சுரப்பிகள் வேலை செய்து, வியர்வையை வெளியேற்றி, வெப்பநிலை உயராமல் பார்த்துக்கொள்ளும். பாலூட்டிகளில் நாய், பூனை, யானை, வெளவால், குரங்குகள் போன்றவை எக்கிரின் அல்லது அபோகிரின் அல்லது இரண்டு சுரப்பிகளையும் சேர்த்துப் பெற்றுள்ளன.
எக்கிரின் சுரப்பிகள் (Eccrine glands) உடல் முழுவதும் இருக்கக்கூடியவை. மனிதர், வால் இல்லாக் குரங்குகள் போன்றவை எக்கிரின் சுரப்பிகளைப் பெற்றுள்ளன. வால் இல்லாக் குரங்குகளில் முடிகளால் மூடப்பட்ட கொரில்லாக்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் அக்குள், உள்ளங்கைகள், கால் பாதங்கள் போன்றவற்றில் வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன. நாய்களும் பூனைகளும் அபோகிரின் சுரப்பிகளைப் (Apocrine Glands) பெற்றுள்ளன. இவை பாதங்களில் இருக்கும். நாய்களுக்கு இந்தச் சுரப்பிகள் மிகக் குறைவாக இருப்பதால், கோடைக் காலத்தில் நாக்கின் மூலம் நீரை வெளியேற்றி, சுவாசப் பாதையை ஈரமாக வைத்துக்கொண்டு, உடலின் வெப்பத்தைச் சீராக வைத்துக்கொள்கின்றன.
பன்றி, காண்டாமிருகம், நீர்யானை போன்றவை வெப்ப ரத்தப் பிராணிகளாக இருந்தாலும் அவற்றுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லை. அதனால்தான் பெரும்பாலான நேரம் தண்ணீரிலும் சகதியிலும் உடலை அமிழ்த்தி, உடலின் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கின்றன.
குறிஞ்சி மலர் ஏன் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறது, டிங்கு?
-அ. சுபிக்ஷா, ஒன்பதாம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி, ஓசூர்.
குறிஞ்சி மலர் ஆசியாவில் மட்டுமே காணப்படும் செடி இனம். இந்தியாவில் சுமார் 50 வகை குறிஞ்சிச் செடிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் கொடைக்கானல், நீலகிரி, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. Strobilanthes kunthiana என்ற இனத்தைச் சேர்ந்த தாவரங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூக்கும் தகவமைப்பைப் பெற்றுள்ளன. 7, 12, 16, 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய குறிஞ்சி வகைகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே குறிஞ்சிச் செடிகள் பூக்கின்றன. உயிர் தப்பிப் பிழைப்பதற்கான வழியாக இவ்வாறு நீண்ட காலம் கழித்துப் பூப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
குறிஞ்சிப் பூக்களில் இருக்கும் பூந்தேன் மிகவும் சுவையானது. பூக்களை நாடி பூச்சிகள், பறவைகள், விலங்குகள் ஏராளமாக வருகின்றன. அதனால் அவற்றிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்கு இந்தத் தகவமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு முறை பூத்த பிறகு விதைகளை மண்ணில் விட்டுவிட்டு, செடிகள் மடிந்துவிடுகின்றன. மீண்டும் விதைகளில் இருந்து புதுச் செடிகள் உருவாகி, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பூக்கின்றன. பூக்கக்கூடிய காலண்டர் அதன் மரபணுவிலேயே அமைந்திருப்பதால், அவை ஒரே நேரத்தில் குறிப்பிட்ட காலத்தில் பூக்கின்றன, சுபிக்ஷா. தற்போது கேரளாவில் உள்ள மூணாறு மலையில் நீலக்குறிஞ்சி பூத்திருக்கிறது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Need Help? Chat with us