தஞ்சாவூரில் விமானப்படைக்கு ஆள் சேர்ப்பு முகாம் 23-ந்தேதி தொடங்குகிறது

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் வரும் 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு முகாம் நடக்கிறது. 23-ந்தேதி நடக்கும் முகாமில் அரியலூர், சென்னை, கோவை, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.
26-ந்தேதி நடக்கும் முகாமில் கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, நாமக்கல், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் மற்றும் காரைக்கால், புதுச்சேரி பகுதிகளை சேர்ந்தவர்களும் தேர்வு முகாமில் கலந்து கொள்ளலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வாளர்கள், திருமணமாகாத ஆண்களாகவும், இந்தியக் குடிமகனாகவும் இருத்தல் வேண்டும். 14.07.1998 முதல் 26.06.2002-க்குள் பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும். பிளஸ்-2 அல்லது அதற்கு சமமான படிப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
அசல் சான்றிதழ்களை, மேற்படிப்பிற்காக கொடுத்திருந்தால் சான்றிதழ் நகல்களில் கையொப்பமிட்டு கொண்டு செல்ல வேண்டும். மேலும் விவரங்களுக்கு, www.airmenselection.gov.in என்ற இணையதள முகவரியில் அல்லது 044-22390561, 044-22395553 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here