புதிய பாடத் திட்டத்திலிருந்து நீட் தேர்வில் 99 % கேள்விகள்-மாநில கல்வித் துறைச் செயலர் (புதிய பாடத் திட்டம்) உதயசந்திரன்

தமிழகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பாடத் திட்டத்திலிருந்து, அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் 99 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக மாநில கல்வித் துறைச் செயலர் (புதிய பாடத் திட்டம்) உதயசந்திரன் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த உதயசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த கல்வி ஆண்டு முதல், 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, பெற்றோர்கள், மாணவர்கள் தரப்பில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பாடப் புத்தகம் சிபிஎஸ்இ, எஸ்சிஆர்டி உள்ளிட்ட பிற மாநில பாடத் திட்டங்களை ஆய்வு செய்து, தரமாகத் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடத் திட்டத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தொழில்நுட்பம் இழையோடுகிறது.
அகில இந்திய அளவில், தமிழகம்தான் இந்தப் பாடப் புத்தக விரைவுக் குறியீடுகளை இணைய வழியில் பயன்படுத்தி, புதிய பாடத் திட்டத்தை பொதுமக்கள், மாணவர்களிடையே கொண்டு சேர்த்ததில் முன்னிலை பெற்றுள்ளது. சராசரியாக நாளுக்கு 2 லட்சம் பேர் காணொலி காட்சி வாயிலாகப் பார்த்து, கற்று மகிழ்ந்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில், பிளஸ் 1 புதிய பாடத் திட்டம், பிளஸ் 2 பாடத் திட்டத்திலிருந்து 99 சதவீத கேள்விகள் இடம் பெற்றுள்ளன. புதிய பாடத் திட்டங்கள் எவ்வளவு சிறப்பாக உள்ளது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
புதிய பாடத் திட்டத்தை மாணவர்கள் முழுமையாகப் படிப்பதுடன், ஆசிரியர்களும் கற்பிக்க உழைக்கும் பட்சத்தில், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில், அகில இந்திய அளவில் ஓரிரண்டு ஆண்டுகளில் அதிக வெற்றியைக் குவிப்பர். பாடப் புத்தகங்களை இன்னும் சிறப்பாக மாணவர்களிடம் எடுத்துச் செல்ல தமிழகம் முழுவதும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
வட மாவட்டங்களில் தேர்ச்சியை அதிகரிக்கவும், கல்வியை மேம்படுத்தவும் இந்த பயிற்சிகள் பயன்பெறும். ஆசிரியர்கள் இதற்கான தகுதியைப் பெற தொடர் பயிற்சி வழங்கப்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமன்றி தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு பாடப் புத்தகமும் 5 அல்லது 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டியது கட்டாயமாகும். தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றி அமைத்துள்ளதால், ஆசிரியர்கள் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என்றார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here