வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறை ரத்து: 3 நாள்களில் அரசாணை

குளஞ்சியப்பா ஐஏஎஸ் அகாதெமி திறப்பு விழாவில் பேசுகிறார் அமைச்சர் செங்கோட்டையன். உடன் அகாதெமி இயக்குநர் வி.குளஞ்சியப்பா, சட்டப்பேரவை உறுப்பினர் விருகை ரவி

ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ்) முறையை ரத்து செய்வது குறித்த அரசாணை மூன்று நாள்களுக்குள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
சென்னை அண்ணா நகரில் அமைக்கப்பட்டுள்ள குளஞ்சியப்பா ஐஏஎஸ் அகாதெமி, பிரிஸ்மா நீட் அகாதெமி ஆகியவற்றின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பயிற்சி மையங்களை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் மாவட்ட மைய நூலகங்களில் இளைஞர்களுக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சிகள் வழங்குவதற்காக ரூ.2.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து முதல் கட்டப் பயிற்சியை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.
ரஜினிக்கு நன்றி: அடுத்த ஆண்டு பிளஸ் 2 பாடத் திட்டத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி குறித்த 12 புதிய பாடங்கள் இணைக்கப்படவுள்ளன. இதன் மூலம் பள்ளியிலேயே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தமிழக கல்வித் துறை சிறப்பாகச் செயல்படுகிறது எனப் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு அரசின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
3 நாள்களில் அரசாணை: தையல், ஓவியம், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் 20 நாள்களில் தொடங்கும். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதிய 82, 000 பேர் பணிக்காக காத்திருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு தகுதிகாண் (வெயிட்டேஜ்’) மதிப்பெண் முறையை தளர்த்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த மதிப்பெண் முறையை ரத்து செய்வது குறித்த அரசாணை மூன்று நாள்களில் வெளியாகும்.
200 அரசுப் பள்ளிகள்: தமிழகத்தில் 200 அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தப்படுவது தொடர்பான நடடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நிதிக் குழு செயலருக்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு ஒரிரு நாள்களில் அறிவிப்பு வெளியாகும் என்றார் அமைச்சர்.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.நடராஜ், முருகுமாறன், வடசென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் வெங்கடேஷ் பாபு, பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன், மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ சந்திரகுமார், குளஞ்சியப்பா ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் வி.குளஞ்சியப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here