தேசிய வேளாண் நுழைவுத்தேர்வு ரத்து!!!

நாடு முழுவதும், கடந்த ஜூன் மாதம் நடந்த, தேசிய வேளாண்
 நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, இந்திய வேளாண் 
ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது. 

ஐ.சி.ஏ.ஆர்., எனப்படும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 
கீழ், நாடு முழுவதும் செயல்படும் வேளாண் பல்கலைகள் மற்றும்
 நிறுவனங்களில், பல்வேறு வேளாண் படிப்புகள் 
வழங்கப்படுகின்றன. இவற்றில், இளநிலை படிப்புகளில், 
15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 
25 சதவீத இடங்கள், அகில இந்திய வேளாண் நுழைவுத் 
தேர்வுகள் மூலம், இட ஒதுக்கீடு முறையில் நிரப்பப்படுகின்றன. 
நடப்பாண்டு, தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகளுக்கான, 
ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 18 முதல், ஜூன், 3ம் 
தேதி வரை நடந்தது. நாடு முழுவதும், முதுநிலை மற்றும் 
ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேர்வு, ஜூன், 22ம் தேதியும், 
இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, ஜூன், 23ம் 
தேதியும் நடந்தன. 

சென்னை, தனியார் கல்லுாரி தேர்வு மையத்தில் நடந்த, 
இளநிலை படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வில், 
மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கம்யூட்டர்களில், பல்வேறு 
தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டன. தேர்வு மையத்தில் 
தேர்வெழுதிய, 32 மாணவர்களும், வினாக்களுக்கு முழுமையாக 
விடையளிக்க முடியாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட 
வழக்கில், ‘அகில இந்திய வேளாண் ஒதுக்கீடுகளுக்கு, 
மறுதேர்வு நடத்த வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டது. 
இதை தொடர்ந்து, ஜூன் மாதம் நடந்த, தேசிய வேளாண் 
நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, 
அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஐ.சி.ஏ.ஆர்., நிறுவன விஞ்ஞானி, முத்தமிழ் செல்வன் 
கூறியதாவது: ஐ.சி.ஏ.ஆர்., சார்பில் நடப்பாண்டு நடத்தப்பட்ட, 
இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான, 
தேசிய வேளாண் நுழைவுத் தேர்வுகள், அதிகாரப்பூர்வமாக 
ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு தேர்வுகளுக்கான தேதி, 
ஐ.சி.ஏ.ஆர்., இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். 
தேர்வுகள் தொடர்பான தகவல்களுக்கு, 011 – 25843635, 
011 – 25846033 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here