தமிழகத்தில் அடுத்த வாரம் 3,000 பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ துவக்கம்’

திருவண்ணாமலை: ”தமிழகத்தில், அடுத்த வாரம் முதல், 3,000 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் துவங்க உள்ளது,” என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த, தளரப்பாடி, சகாயபுரம், பூமாட்டு காலனி ஆகிய, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டடம், சமையற்கூடம், கழிவறை மற்றும் ஆரணியில், ஒரு கோடியே, 61 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை, அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.இதை தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, சேலம், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய, ஐந்து மாவட்டங்களை சேர்ந்த, 21 பேருக்கு கனவு ஆசிரியர் விருதுகளும், 13 பள்ளிகளுக்கு, புதுமைப் பள்ளி விருதுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: பள்ளிக்கல்வித்துறைக்கு, 27 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், 68 கல்வி மாவட்டத்தை, 120 கல்வி மாவட்டமாக மாற்றியமைத்து, 892 வட்டார கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கூடுதல் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டார கல்வி அலுவலர், 35 முதல் 40 பள்ளிகள் வரை ஆய்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 3,000 பள்ளிகளில் அடுத்த வாரம் முதல், ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்பட உள்ளது. ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முற்றிலும் கணினி மயமாக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். கலெக்டர் கந்தசாமி, அமைச்சர் ராமச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பரிதீப்யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here