டியூஷன் சென்டர்’களுக்கு அங்கீகாரம் கட்டாயமாக்க வருகிறது புதிய சட்டம்

சிறப்பு பயிற்சி அளிக்கும், ‘டியூஷன் சென்டர்’கள் மற்றும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுக்கான பயிற்சி தரும் மையங்கள், பள்ளி கல்வித் துறையின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகிறது. இதற்கான சட்டம், விரைவில் அறிமுகமாகிறது.

மருத்துவ படிப்பில் சேர, ‘நீட்’ நுழைவு தேர்வு கட்டாயமானதால், பள்ளிகளில், தனியார் சிறப்பு பயிற்சி நிறுவனங்களை அனுமதித்து, நுழைவு தேர்வுகளுக்கு பயிற்சி தரப்படுகிறது.இந்த பயிற்சிக்கு, மாணவர்களிடம் கட்டாயமாக, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, பெற்றோர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளிகளில் சிறப்பு பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக பயிற்சி அளிக்க, தமிழக அரசு தடை விதித்து உள்ளது.

இந்நிலையில், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் டியூஷன் சென்டர்கள் என்ற, தனியார் கல்வி மையங்களை முறைப்படுத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள, சி.பி.எஸ்.இ., – மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ., ஆகிய, அனைத்து பாடத்திட்ட தனியார் பள்ளிகளிலும், நீட், ஜே.இ.இ., – சி.ஏ., போன்ற, நுழைவு தேர்வுகளின் பெயரில், சிறப்பு பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த பயிற்சி மையங்கள் புற்றீசலாக, ஆங்காங்கே பல்வேறு பெயர்களில் நிறுவப்படுகின்றன.மேலும், மாநிலம் முழுவதும், டியூஷன் சென்டர்களும் பெருகி வருகின்றன. இந்த மையங்களின் பின்னணியில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் உள்ளனர். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியில் உள்ளவர்கள் பலர், டியூஷன் சென்டர்களின் உரிமையாளர்களாக உள்ளனர். 

இதற்கான பட்டியல் எடுக்கும் பணி நடந்து வருகிறது.ஆசிரியர்கள் டியூஷன் சென்டர்கள் வைத்துள்ளதால்,தங்கள் பள்ளிக்கு வரும்,மாணவர்களை டியூஷனுக்கு வரவைத்து, கட்டணம் பெற்று, சிறப்பு பயிற்சி அளிக்கின்றனர். அதனால், பள்ளிகளில் பாடங்களை ஒழுங்காக நடத்துவதில்லை. இதை ஊக்குவித்தால், பொருளாதார வசதியுள்ள மாணவர்கள் மட்டுமே, டியூஷனில் சேர்ந்து, சிறப்பு பயிற்சி பெற்று, அதிக மதிப்பெண் வாங்கும் நிலை வரும்.

டியூஷன் சென்டர்கள் எவ்வித சட்ட அங்கீகாரமும் இல்லாமல் செயல்படுவதோடு, பாதுகாப்பில்லாத வகையில், சிறிய கட்டடங்களில், சிறிய அறைகளில், மாணவர்களை நெருக்கடியாக அமர வைத்து பாடங்களை நடத்துகின்றன.இதனால், மாணவர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது.

டியூஷன் சென்டர்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களுக்கு, முறையான கணக்குகள் இல்லை. எனவே, இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் டியூஷன் சென்டர்களை, அரசின் கண்காணிப்பில் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.அதனால், பயிற்சி மையங்கள் மற்றும் டியூசன் சென்டர்களுக்கு, இனி அரசின் அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகும். இதற்கான சட்டமும், விதிமுறைகளும் விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here