பள்ளிகளுக்கு புதிய கட்டடம் – பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

அனைத்து மாவட்டங்களிலும், பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, பழைய கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடங்கள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது,” என, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

தி.மு.க., – சக்கரபாணி: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள, மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு, கலையரங்கம் மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்ட, அரசு முன் வருமா?

அமைச்சர் செங்கோட்டையன்: அந்த பள்ளியில், போதிய வசதி உள்ளது.

சக்கரபாணி: அந்த பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர்.நான்கு வகுப்பறை உடைய கட்டடம் பழுதடைந்துள்ளது. ஒரு கட்டடம் இடியும் நிலையில் உள்ளது.அதற்கு பதிலாக, 12 வகுப்பறைகள் உடைய, புதிய கட்டடம் கட்ட வேண்டும். கூடுதலாக, ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாயிலாக ஆய்வு செய்து, கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்; ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர்.

சக்கரபாணி: அனைத்து பள்ளிகளுக்கும், தேவையான கட்டடம் கட்டித்தர வேண்டும். ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர், மருத்துவ கல்லுாரியில் சேர்ந்துள்ளனர்?

அமைச்சர் செங்கோட்டையன்: அனைத்து மாவட்டங்களிலும், முதன்மை கல்வி அலுவலர், பொதுப்பணித்துறை அலுவலர்கள் வாயிலாக, பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்யவும், பழைய கட்டடங்களுக்கு பதிலாக, புதிய கட்டடங்கள் கட்டவும் உத்தரவிடப் பட்டுள்ளது.’நீட்’ தேர்வு குறித்த புள்ளி விபரம் தற்போது இல்லை. இந்த ஆண்டிற்கான, ‘நீட்’ தேர்வு பயிற்சி வகுப்புகள், இந்த மாதத்தில் துவங்கும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here