சாதி, வருமானச் சான்றிதழ்கள் பெற புதிய செயலி!


சாதி, வருமானச் சான்றிதழ்கள் பெற புதிய செயலி!
வீட்டில் இருந்துகொண்டே பிறப்பு, சாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களைப் பெறுவதற்கான புதிய மொபைல் செயலியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜுலை 3) தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டுவரும், தேசிய மின் ஆளுகை திட்டத்தின் மூலம் புதிய மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுத் துறைகள் முதல் உள்ளாட்சித் துறைகள் வரை நாடு முழுவதும் மின் ஆளுகை மூலம் வழங்கப்பட்டுவரும் சேவைகளை ஒரே தரவு தளத்தின் கீழ் இந்த செயலி மூலம் பெறலாம்.

தமிழ்நாடு மின் ஆளுகை முகமையின் மூலம் மின்மாவட்ட திட்டத்தின் கீழ் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டுவருகின்றன. முதல் கட்டமாக, வருவாய்த் துறையைச் சேர்ந்த சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் பிறப்பிட, இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை ( UM-A-NG ) செயலியில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் செல்போன்களில் இந்த செயலியைப் பதிவிறக்கம் செய்து சான்றிதழ்களைப் பெற முடியும்.

இந்த சான்றிதழ்கள் அனைத்துமே பொதுச் சேவை மையங்கள் மற்றும் இ-சேவை மையங்கள் வழியாக மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன. மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சான்றிதழ் பெறும் வழியை எளிமையாக்கும் நோக்கிலும் இந்த செயலி கொண்டுவரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, இதன் மூலம் 20 சேவை சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here