ஏழை மக்களின் சொந்த வீட்டு கனவை நனவாக்க ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ (பிரதமர் வீடு கட்டும் திட்டம்) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் வீட்டு கடனுக்கு வட்டி மானிய சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. ரூ.6 லட்சம் முதல் ரூ.12 லட்சம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் நடுத்தர வருவாய் பிரிவினர்-1 என்றும், ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம்வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் நடுத்தர வருவாய் பிரிவினர்-2 என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதிகபட்சம் 20 ஆண்டு காலத்துக்கு ரூ.9 லட்சம்வரை வீட்டுக்கடன் வாங்கும் முதல் பிரிவினர் 4 சதவீத வட்டி மானியம் பெறுவதற்கும், ரூ.12 லட்சம்வரை வீட்டுக்கடன் வாங்கும் 2-ம் பிரிவினர் 3 சதவீத வட்டி மானியம் பெறுவதற்கும் தகுதி படைத்தவர்கள் ஆவர். அதாவது, அவர்களுக்கான வட்டியில் மேற்கண்ட சதவீதத்துக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

இந்த வட்டி மானியம் பெற தகுதி பெறுவதற்கு வீட்டின் பரப்பளவிலும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வருவாய் பிரிவினர்-1 வாங்கும் வீட்டின் சுவர்களுக்கு உள்ளடங்கிய உட்புற பரப்பளவு (கார்பெட் ஏரியா) 120 சதுர மீட்டராகவும், நடுத்தர வருவாய் பிரிவினர்-2 வாங்கும் வீட்டின் உட்புற பரப்பளவு 150 சதுர மீட்டராகவும் இருக்க வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த உச்சவரம்பை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் உயர்த்தி உள்ளது. அதன்படி, நடுத்தர வருவாய் பிரிவினர்-1 வீட்டின் பரப்பளவு 160 சதுர மீட்டர்வரையும், நடுத்தர வருவாய் பிரிவினர்-2 வீட்டின் பரப்பளவு 200 சதுர மீட்டர்வரையும் இருக்கலாம்.

கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு இது அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், இன்னும் அதிகமானோர் வீட்டு கடனுக்கு வட்டி மானிய சலுகை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சலுகையால், மெட்ரோ நகரங்களை ஒட்டிய புறநகர்கள் மற்றும் சிறு நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரிக்கும் என்று கட்டுமான தொழில் நிறுவன அதிபர்கள் பலர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குறைவான வருமானத்துடன் வாடகை வீட்டில் வசிக்கும் ஏராளமானோருக்கு சொந்த வீடு வாங்கும் எண்ணம் பிறக்கும் என்றும், கட்டுமான தொழில் வளரும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here