தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கவுன்சிலிங் வழியாக சேர்ந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதனால், தனியார் கல்லுாரிகள் தங்கள் மாணவர்களை, கவுன்சிலிங்கில் பங்கேற்க வைத்துள்ளன.

அண்ணா பல்கலையின், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சிலிங், அடுத்த மாதம் நடக்கிறது.

1.60 லட்சம் :

இதற்காக, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இன்ஜினியரிங் படிப்பில் சேருவோரில், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு, அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, அரசேஏற்றுக் கொள்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அனைவருக்கும், கல்விக் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சகம் வழியே, கல்லுாரிகளுக்கு வழங்கப்படும்.

இந்நிலையில், பல கல்லுாரிகள், தங்கள் நிர்வாக இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்த்து, அவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், அந்த மாணவர்களுக்கும் சேர்த்து, அரசிடம் உதவித்தொகை பெறுவதாகவும், புகார் எழுந்துள்ளது.

இது குறித்து, அரசு தரப்பில் ஆய்வு நடத்தப்பட்டு, கல்வி உதவித்தொகை மற்றும் கட்டண சலுகை வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ‘அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தையே, கல்லுாரிகள் வசூலிக்க வேண்டும். தனியார் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்வதாக இருந்தால், அரசு நடத்தும் கவுன்சிலிங் வழியே சேர வேண்டும்.

‘இப்படி சேர்ந்தால் மட்டுமே, மாணவர்களுக்கு கல்விக் கட்டண சலுகை அல்லது உதவித்தொகை வழங்கப்படும்’ என, கல்லுாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
முன்பதிவு :

இதனால், பல தனியார் கல்லுாரிகள், ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்திருந்த மாணவர்களை, ஆன்லைனில் விண்ணப்பிக்க வைத்து, கவுன்சிலிங்கில் பங்கேற்க செய்துள்ளன. இந்த மாணவர்களை, ஒவ்வொரு உதவி மையத்திற்கும், தங்கள் வாகனங்களில் அழைத்து சென்று, சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்கின்றன.

ஆன்லைன் கவுன்சிலிங்கில், மாணவர்கள், தங்கள் கல்லுாரிகளை தேர்வு செய்யவும், கல்லுாரிகளின் ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளதாக, மாணவர்கள் தரப்பில், தகவல்கள் வெளியாகியுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here