பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் சென்னையில் 
காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

 தமிழக அரசு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தியபோது ஏற்பட்ட ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்  என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த 7 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இருப்பினும் தமிழக அரசு இதுவரை அவர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. கடந்தாண்டு முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

 இதை கண்டித்து கடந்த மாதம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதனால், முன்னெச்சரிக்கையாக அனைத்து மாவட்டங்களிலும் ஜாக்டோ-ஜியோ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை போலீசார் வீடு புகுந்து கைது செய்தனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் தடையை மீறி போராட்டம் நடந்தது.

இந்நிலையில், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

 அதன்படி, சென்னை எழிலகத்தில் உள்ள ஆவின் வளாகம் முன்பு நேற்று காலை 10 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்

 முன்னதாக, தற்போது சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருவதால் பிரச்னைகளை தடுக்க உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் எழிலக வளாகம் நேற்று காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.
 இதேபோன்று பிற மாவட்டங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேற்று மாலை வரை அரசு அழைத்து பேசாததால் நேற்றிரவும் உண்ணாவிரதம் நீடித்தது. தொடர்ந்து விடிய, விடிய எழிலகம் வளாகத்தில் போராட்டக்காரர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

போராட்டம் குறித்து அமைப்பின் நிர்வாகி மாயவன் கூறுகையில், ‘‘பழைய ஓய்வூதியம் அமல்படுத்துவது, ஊதிய முரண்பாட்டை சரி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தியும் இந்த அரசு செவிசாய்க்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்க முடியாத நிலையில் திராணியற்ற அரசாக உள்ளது.

 அரசு துறைகளில் 3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பாமல் அந்த இடங்களை பறிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 அதை உடனே ரத்து செய்ய வேண்டும். தற்போது எங்கள் போராட்டம் நீடிக்கும். அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசி கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் நீடிக்கும்’’ என்றார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here