எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளது. வரும் 28ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து, ஜூலை முதல் வாரத்தில் முதல்கட்ட கலந்தாய்வு நடக்கிறது.

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ்  படிப்புகளுக்கு மே 6ம் தேதி நீட் தேர்வு  நடந்தது. இந்த தேர்வு முடிவுகள்  கடந்த 4ம் தேதி வெளியானது. இந்த தேர்வில்  தமிழகத்தில் 45,336 பேர்  தேர்ச்சி பெற்றனர்.

 தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.  இவற்றில் உள்ள  இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீடுக்கு போக 2,594 இடங்கள் உள்ளன. 2 அரசு பல்நோக்கு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 200 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 30 போக 170 இடங்கள் உள்ளன.

 இந்நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, மதுரை மருத்துவ கல்லூரி உட்பட 23 கல்லூரிகளில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

 காலை 10 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் நேரிலும், ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பங்களை பெறுவதற்கு ஜூன் 18ம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்கள் தேர்வு குழுவுக்கு சென்று சேர ஜூன் 19ம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்களை செயலாளர், தேர்வுக்குழு மருத்துவ கல்வி இயக்ககம், பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். ஜூன் 19ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

மேலும், அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500ம், சுய நிதி நிர்வாக ஒதுக்கீட்டிற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.1000ம்  செலுத்த வேண்டும்.
 அரசு கல்லூரிகளில் உள்ள சிறப்பு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் பொது விண்ணப்பத்துடன் சேர்த்து சிறப்பு ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒரே உறையில் அனுப்ப வேண்டும்.

 ஒவ்வொரு சிறப்பு ஒதுக்கீட்டிற்கும் ரூ.100 வீதம் வரைவு காசோலையை இணைத்து அனுப்ப வேண்டும். அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த மாணவர்கள் டிடி இணைக்க தேவையில்லை.  இவர்கள் விண்ணப்ப மனுவுடன் சாதி சான்றிதழின் நகல் சமர்ப்பித்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

வரைவு காசோலையை the secretary, selection committee, kilpauk, chennai-10 என்ற பெயரில் எடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org, www.tnmedical selection.org இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
 இந்த நிலையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வரும் 28ம் தேதி வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து, முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1ம் தேதி முதல் 5ம் தேதி வரையும், 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16ம் தேதி முதல் 21ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here