17 இன்ஜி., கல்லூரிகளில் சேர்க்கை நிறுத்தம்; 3,182 பி.இ., இடங்களுக்கு அனுமதி மறுப்பு


பல்வேறு பிரச்னைகளால், 17 இன்ஜினியரிங் கல்லுாரிகள் உட்பட, 20 கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பு குறைவாக இருந்த, 134 கல்லுாரிகளில், 3,182 இன்ஜினியரிங் இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 550க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்புகளிலும், 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பிலும், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். பல ஆண்டுகளாக, இன்ஜினியரிங் சேர்க்கையில் பெரும் சறுக்கல் ஏற்படுவதால், பல கல்லுாரிகள், நிர்வாகத்தை நடத்த முடியாமல், சிரமத்துக்கு ஆளாகியுள்ளன.

மேலும், நிதி பற்றாக்குறையால், சரியான பேராசிரியர்களை நியமிக்க முடியாமலும், ஆய்வகங்களை பராமரிக்க முடியாமலும், பல கல்லுாரிகள் திணறுகின்றன. சில கல்லுாரிகளில், அனைத்து வசதிகளும் இருந்தும், மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது. இந்நிலையில், இந்தாண்டு மே மாதம், அண்ணா பல்கலை வெளியிட்ட தேர்ச்சி பட்டியலில், 10 கல்லுாரிகளில், 10 சதவீதத்திற்கும், குறைவான மாணவர்களே தேர்ச்சி பெற்றிருந்தனர்.

Tamil News
மூன்று கல்லுாரிகளில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாததும் தெரியவந்தது. இதற்கிடையில், புதிய கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்த கல்லுாரிகளில், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து வழங்கும் குழுவினர், நேரில் ஆய்வு நடத்தினர். இதில், பல கல்லுாரிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக பராமரிக்காததும், சில கல்லுாரிகளில், சரியான ஆசிரியர்கள் இல்லாததும் தெரிய வந்தது.

இதையடுத்து, உள்கட்டமைப்பு வசதியை சரிசெய்யாதது ஏன் என, விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை சார்பில், 255 கல்லுாரிகளுக்கு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்ட கல்லுாரிகளில்,
134 கல்லுாரிகளில், உள்கட்டமைப்பு பிரச்னையால், 3,182 இன்ஜி., இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த கல்லுாரிகள், 8,752 இடங்களை கேட்ட நிலையில், அவற்றுக்கு, 5,570 இடங்களில் மட்டும், மாணவர்களை சேர்க்க, அண்ணா பல்கலை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கு, கல்லுாரிகளில் விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில், 20 கல்லுாரிகள், மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளன.

இதனால், அந்த கல்லுாரிகள், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை. அவற்றில், 17 இன்ஜினியரிங் கல்லுாரிகள், மற்ற மூன்றில், இரண்டு மேலாண்மை கல்லுாரிகள், ஒன்று பி.ஆர்க்., கல்லுாரி. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 2017ஐ விட, இந்த ஆண்டு, 19 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.

இருப்பினும், பெரும்பாலான மாணவர்கள், முன்னணி கல்லுாரிகளில் மட்டுமே சேர முயற்சிப்பதால், தரவரிசையில் பின்தங்கும் கல்லுாரிகள், படிப்படியாக மாணவர் சேர்க்கையை குறைத்து, கல்லுாரிகளை மூட திட்டமிடுவதாக, உயர்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here