பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு சில சிக்கல்கள்


கடந்த சில மாதங்களாக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் பள்ளிக் கல்வித்துறை
அமைச்சர், தற்போது பயோ-மெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெற்றோர் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

 இருப்பினும் இந்த பயோ-மெட்ரிக் முறையைப் பயன்படுத்துவதால் பள்ளிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகள் சுமார் 34,180, நடுநிலைப் பள்ளிகள் சுமார் 9938, உயர்நிலைப் பள்ளிகள் சுமார் 4574, மேல்நிலைப் பள்ளிகள் சுமார் 5,030 உள்ளன. அவற்றில் சில லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஊதியம், அகவிலைப்படி உயர்வு குறித்த விவரங்கள், விடுப்பு குறித்த பதிவேடுகள், வருடாந்திர ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை கையாள்வதற்கென்று ஆசிரியரல்லாத ஊழியர்கள் எவரும் கிடையாது.

இவற்றை எல்லாம் அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் யாராவது ஒருவரோ அல்லது சிலரோ இணைந்துதான் இப்பணிகளை செய்து வருகின்றனர்.

கல்வித்துறை அலுவலகம் செல்வது, கருவூலத்துக்கு செல்வது என்பன உள்ளிட்ட பணிகளையும் ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளதால், பல நாள்கள் அத்தகைய ஆசிரியர்கள் பள்ளிக்கு முழுமையாகவோ அல்லது குறிப்பிட்ட நேரமோ செல்ல முடியாத நிலை ஏற்படுவதுண்டு.

சில அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியாளர்கள் பலர் இருப்பதால் பிரச்னையில்லை. அவர்கள் அனைத்து விதமான அலுவலகப் பணிகளையும் கையாண்டு கொள்வர்.

 ஆனால், பல அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர், எழுத்தர், உதவியாளர் போன்றோர் நியமிக்கப்படவில்லை.

 இதன் காரணமாக, பள்ளி திறப்பது முதல் அடைப்பது வரையும், ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை பெறுவதையும், அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள்தான் செய்ய வேண்டிய நிலையுள்ளது.

மேலும் பணிப் பதிவேடு எழுதுவது, அதை சம்பந்தப்பட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைப்பு செய்வது உள்ளிட்ட பணிகளையும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களே செய்ய வேண்டியுள்ளது.

 மாதத்தில் பல நாள்கள் அலுவலகப் பணிக்காக அவர்கள் வெளியே சென்றுவிடுவதால், குறிப்பிட்ட பாட வேளைகளில் ஆசிரியர் இன்றி மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு அதிரடியாக பயோ-மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

 இதையடுத்து, ஆசிரியர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அந்த பயோ-மெட்ரிக் முறையில் தங்கள் வருகையையும், வெளியேறும் நேரத்தையும் பதிவிட்டு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 அலுவலக வேலையாக வெளியே செல்லும் ஆசிரியர் பயோ-மெட்ரிக் முறையில் மாலை வெளியேறும் நேரத்தைப் பதிவிட பள்ளிக்குத் திரும்ப வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

 இதன் காரணமாக ஊதிய பில்கள் உள்ளிட்ட இதரப் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் பள்ளியைவிட்டுச் செல்ல முன்வராத நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியரல்லாத பணியாளர்கள் நியமிக்கப்படுவார்களா? பல்வேறு விதமான பணிகளுக்காக, ஆசிரியரல்லாத பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

 ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியாளரை நியமிப்பதில் அரசுக்கு இழப்பு ஏற்படும் என கருதினால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பள்ளிகளுக்கு ஓர் ஆசிரியரல்லாத பணியாளரை நியமிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 அப்படி நியமிக்கப்பட்டால், ஆசிரியர்கள் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை தவிர்க்கப்படுவதுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்காது என்கின்றனர் கல்வியாளர்கள்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here